

திருச்சி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 30 வருடமாக சிலை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இதில் போலீசாரும் உடந்தையாக இருந்தனர். இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் உள்ள தங்க பொருட்களை ரிசர்வ் வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். இதன்மூலம் டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.
மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததன் மூலம் சிறுபான்மையினர் மீது மறைமுக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏரி, குளங்களில் அள்ளப்படும் மண் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பால் கலப்பட விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் அவருக்கு துணையாக இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் அதிகாரிகள்தான் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி, அமித்ஷா உத்தரவுப்படி தமிழக அரசு இயங்கி வருகிறது. குட்கா போன்ற போதை பொருட்களை அனுமதிக்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால்தான் பொதுமக்களும் தங்களது குழந்தைகளை சேர்ப்பார்கள். தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.