காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வட திசையில் நகரும் வாய்ப்பு உள்ளதால் நாளை முதல் கடலோர மாவட்டங்களில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்ககடலில் கடந்த 10-ந்தேதி முதல் 4 நாட்களாக நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று இன்று அதே பகுதியில் நீடிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வட திசையில் நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை (14-ந்தேதி) முதல் கடலோர மாவட்டங்களில் மழை குறையும்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையிலும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வடசென்னை, நுங்கம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், கொலப் பாக்கம், தாமரைப்பாக்கம், அரண்மனைபுதூரில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

மீனம்பாக்கம், சோழவரம், செங்குன்றம், தரமணியில் 3 செ.மீ., திருவள்ளூரில் 2 செ.மீ., தாம்பரம், மகாபலிபுரம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, பூண்டி, திருவாலங்காடு ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com