எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த நெருக்கடியும் இல்லை: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என மதுரையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த நெருக்கடியும் இல்லை: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.
Published on

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் 50 அடி ரோட்டில் அம்மா திட்ட முகாம் இன்று நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தையல் எந்திரங்கள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு இன்னும் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து எந்த நெருக்கடியும் இன்றி செயல்படும்.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை நான் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எந்த நெருக்கடியும் ஏற்படுத்தவில்லை.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யாரை சந்திக்க வேண்டும்? யாரை சந்திக்கக்கூடாது? என்று எங்களுக்கு எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை. மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோமே தவிர, எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

மதுரையில் ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை, வைகையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள், ஆவின் சந்திப்பு, அப்போலோ- மானகிரி சந்திப்பு ஆகிய 4 இடங்களில் பாலங்கள் அமைக்க ரூ. 70 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 4 பணிகளுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு முதல்- அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு மத்திய அரசின் அதிகாரிகளும் ஆய்வு செய்து இன்னும் அதற்காக அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும் தனது பதவியை பணயம் வைத்து எந்த தியாகமும் செய்ய தயார் என்று கூறி இருக்கிறார்.

அது போலத்தான் நாங்கள் மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தி வருகிறோம். வருகிற 30-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்கவிழா மதுரையில் நடக்கிறது. ரிங் ரோட்டில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

அ.தி.மு.க. அணிகளை பொறுத்தவரை எங்களிடம் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகள் தான். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் தி.மு.க. பக்கம் யாரும் செல்லவில்லை.

ஓ.பி.எஸ்சை ஆதரிப்பவர்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com