

தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டதால் கல்வி உரிமை பறிக்கப்பட்டதால் அதை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் மத்திய பா.ஜனதா அரசும், அதற்கு துணை போன குதிரை பேர அ.தி.மு.க. ஆட்சியும் தான்.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலில் முயற்சி எடுத்த போது அதை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்தது கலைஞர்தான். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடையும் பெற்றார்.
தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்த போதும் நீட் தேர்வு முறை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த போது மறு சீராய்வு மனு போட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திரும்ப பெற வைத்தது.
பாராளுமன்றத்தில் சட்டமும் கொண்டு வந்து நீட் தேர்வை கொண்டு வந்து இருக்கிறார்கள். நீட் தேர்வை நாம் எதிர்ப்பதற்கு என்ன காரணம்? இதுவரை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
இப்போது கிருத்திகா என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பிளஸ்-2 தேர்வில் 199 கட்-ஆப் பெற்று இருந்தும். நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மாநில பாடத்திட்டத்தில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ. பாட திட்ட கேள்விகளை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகதான். ஆனால் சமூக நீதியை அழிக்கத்தான் நீட் தேர்வை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதை இருட்டறையில் பூட்டி வைத்து விட்டது.
இதைவிட தமிழக மக்களுக்கு வேறு என்ன துரோகம் செய்ய வேண்டும். முதல்-அமைச்சரும், ஓ.பன்னீர் செல்வமும் அடிக்கடி டெல்லி சென்று வந்தார்கள். அப்போதெல்லாம் நல்லது நடக்கும் என்றுசொன்னார்கள். அது யாருக்கு? இதை நாங்கள் ஆட்சிக்கு வர துடிப்பதற்காக சொல்லவில்லை. ஒரு போதும் கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டோம்.
தமிழக விவசாயிகள், மாணவர்கள், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டார்கள். வரும் காலங்களில் நடக்கும் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் ஒரு ஆண்டுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குவோம் வேண்டும் என்றார்.
ஆனால் வழங்கினார்களா? நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 20 பேரில் 5 பேர் மட்டும் தமிழக மாணவர்கள். மற்ற அனைவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழக இளைஞர்கள், மாணவர்களின் கோபமும், சாபமும் இந்த ஆட்சியை நீடிக்க விடாது.
தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும். இப்போதும் அதே நிலையில்தான் உள்ளது. ஆனால் அந்த உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.