தினகரனுடன் அமைச்சர்கள் கூட்டு வைத்தனர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினகரனுக்கு ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருக்கும் அமைச்சர்களே துணை நின்றிருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தினகரனுடன் அமைச்சர்கள் கூட்டு வைத்தனர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு தி.மு.க.வும், தினகரனும் செய்த கூட்டுச்சதி தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. 6000 ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இருப்பதை ஆதாரங்களோடு தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகார் கூறி இருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து தினகரன் அணி சார்பில், ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது 4000 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே 10,000 ரூபாய் தருகிறோம், மீதமிருக்கும் 6000 ரூபாயை தேர்தல் முடிந்த பிறகு தருகிறோம் எனச் சொல்லி, 20 ரூபாய் புதிய நோட்டுகளை வரிசை எண் படி வாக்காளர்களுக்கு கொடுத்து “ஹவாலா” அடிப்படையில் வாக்குகளை விலைக்கு பேசி இருக்கிறார்கள்.

அதுவும் ஆதாரங்களோடு பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணப்பட்டுவாடாவை பொறுத்த வரையில் காவல் துறை, தேர்தல் ஆணையம் துணை நிற்பது மட்டுமல்ல, அதுவும் தினகரன் தேர்தல் நடைபெறக்கூடிய நாளுக்கு முந்தைய நாளில், ஹவாலா அடிப்படையில் 20 ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருக்கும் அமைச்சர்களே துணை நின்றிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு வந்திருக்கும் செய்தி.

ஆகவே அவர்கள் தான் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க வைப் பொறுத்த வரையில் நாங்கள் ஜனநாயகத்தோடு தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தோம்.

இந்த தேர்தல் திமுகவின் தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வி என்பதை வெட்கத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com