மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் அவையில் பங்கேற்கிறது: மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் அவையில் பங்கேற்கிறது என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் அவையில் பங்கேற்கிறது: மு.க.ஸ்டாலின் விளக்கம்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. பொறுப்புள்ள எதிர் கட்சியாக தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்துவதற்கு ஜனநாயக மன்றமான சட்டப்பேரவையில் பேரவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆனால் ஆளும் அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அதன்பிறகு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய அனைவருமே சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்களை அனுமதித்ததே இல்லை.

பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பினால், அவற்றுக்குப் பொறுப்பான பதில்களை அளிப்பதில்லை என்பதை முழுநேர வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் தான் பிரதான எதிர்கட்சியான, குறிப்பாக தமிழக வரலாற்றில் மிக வலுவான எதிர் கட்சியாக உள்ள தி.மு.க. சட்டப்பேரவையை சந்தித்து வருகிறது.

தற்போது, கடந்த 14.6.2017 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், பல்வேறு அரசுத்துறைகளின் மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க., அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பலகோடி ரூபாய்கள் ‘குதிரை பேரம்’ நடந்தது குறித்த ‘ஸ்டிங் ஆப்பரே‌ஷன்’ பேட்டிகள் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியானது.

இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று தி.மு.க., சார்பில் முன் வைத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்தார். ‘குதிரை பேரம்’ குறித்த வழக்கு அந்தநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத நிலையிலும், நீதிமன்றத்தை காரணமாக்கி, ‘குதிரை பேரம்’ குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று பேரவைத்தலைவர் மறுத்தார். அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க., உறுப்பினர்களையும் அவையை விட்டு வெளியேற்றி உத்தரவிட்டார்.

கூட்டத்தொடரின் முதல் நாளே ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் தி.மு.க., சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆகவே முதல்நாள் நடைபெற்றது ‘வெளியேற்றமே’ தவிர, தி.மு.க.,வின் ‘வெளிநடப்பு’ அல்ல. அடுத்த நாள் 15.6.2017 அன்று, மீண்டும் இதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என நேரமில்லா நேரத்தில் நான் பிரச்சனை எழுப்பியபோது, பேரவைத்தலைவர் அதற்கு சர்வாதிகாரப் போக்குடன் அனுமதி தர மறுத்தார்.

அதனைக் கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு, பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றோம். "எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவையில் பேசக்கூடாது, என்னிடத்தில் ஆதாரத்தை கொடுத்து விட்டுத்தான் பேச வேண்டும்", என்று நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு பேரவைத்தலைவர் கூறியிருந்தார்.

ஆகவே, கூட்டத்தொடரின் 3-வது நாளான 16.6.2017. அன்று நான் இந்தப் பிரச்சனையை எழுப்பி, “ஆதாரத்தைக் கையிலே வைத்திருக்கிறேன்”, என்று கூறி, அந்த ஆதாரத்தை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். அதையும் சபைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். இந்தப்போக்கை கண்டித்து தி.மு.க., சார்பில் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்குத் திரும்பினோம்.

இதனையடுத்து, 19.6.2017 அன்று, அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஜி.எஸ்.டி., மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதுவரை மசோதாவை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தி.மு.க., முன்வைத்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகம் செய்த விவகாரத்தில், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நான் விவாதிக்க வேண்டுமென அனுமதி கேட்டபோது, பேரவைத்தலைவர் திட்டவட்டமாக அனுமதி மறுத்தார்.


இந்தச் செயலைக் கண்டித்து தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் உடனே பங்கேற்றோம்.

20.6.2017 அன்று மாட்டிறைச்சி தடைச்சட்டம் பற்றி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தேன். இதற்கு, “வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளும்”, என்று முதல்-அமைச்சர் பதிலளித்தார். கேரளா, புதுச்சேரி, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மாட்டிறைச்சி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை சுட்டிக்காட்டிய போதும், முதல்-அமைச்சர் அளித்த பதிலில் அந்தச் சட்டத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றுகூறி, தி.மு.க., சார்பில் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்கு வந்தோம். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களே முதல்- அமைச்சரின் இந்த பதிலை ஏற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எம்.எல்.ஏ.,க்களுடன் குதிரை பேரம் நடந்தது பற்றி, எதிர் கட்சிகள் அளித்த புகார் மனு அடங்கிய சி.டி.யையும் புகார் மனு விவரங்களையும் தமிழக கவர்னர், சபாநாயகருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். "சட்டமன்ற விதி 273-ன் படி ஆளுநர் அனுப்பும் அறிக்கை மற்றும் தகவல்களை சபாநாயகர் சபையில் படித்துக்காட்ட கடமைப்பட்டவர் என்பதோடு, அதற்கு முதல்வர் உரிய விளக்கமும் அளிக்க வேண்டும்”, என்று 21.6.2017 அன்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.

இதை ஏற்க மறுத்த பேரவைத்தலைவர், “தனிப்பட்ட முறையில் ஆளுநரின் முதன்மை செயலாளர் எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். எனவே இதை அவையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை”, என்று கைவிரித்தார். இதனைக் கண்டித்து, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்குத் திரும்பினோம்.

ஆகவே, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால், அப்படியே வீடு திரும்பி விடுவதில்லை. அவைக்குத்தான் உடனடியாக மறுபடியும் செல்கிறோம். எங்களின் ஜனநாயக பூர்வமான எதிர்ப்பை தெரிவித்து விட்டு, உடனடியாக மீண்டும் அவைக்குத் திரும்புவதை வெளியிடாமல், ஒரு சில ஊடகங்கள் திசை திருப்பும் வகையில் செயல்படுவது வேதனையளிப்பதாக இருக்கிறது.

மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுகிறோம். மாணவர்களை பாதிக்கும் ‘நீட் தேர்வு’, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்களை பங்கேற்க விடாமல் கைது செய்தது, விவசாயிகள் கடன் தள்ளுபடி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவது, மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களை கைது செய்தது, 110-விதியின் கீழ் கடந்த ஆறாண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கை கோருவது, உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின் துறை சார்பில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கோருவது, ஜி.எஸ்.டி., மசோதா ஒத்திவைக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஆளுங்கட்சியினர் என்னதான் குறுக்கீடு செய்தாலும், தி.மு.க., சார்பில் தொடர்ந்து வாதாடி வருகிறோம்.

கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தொகுதி பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு தி.மு.க., சட்டமன்ற உறுப்பினரும் தினசரி கேள்விகளை எழுப்புகிறார்கள். கூட்டத்தொடரின் முதல்நாள் தவிர, மற்ற நாட்கள் அனைத்திலும் நடைபெற்ற மான்யக் கோரிக்கைகள் மீது தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் பங்கேற்று பல்வேறு விவாதங்களை நடத்தியுள்ளோம். எங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்துள்ளோம்.

ஆனால் சில ஊடகங்கள், “தி.மு.க., ஏதோ வெளிநடப்பு மட்டுமே செய்து கொண்டிருக்கிறது”, என்பது போன்ற செய்திகளை சித்தரித்து வெளியிட்டு, பொறுப்புள்ள எதிர்கட்சியின் செயல்பாட்டை தவறான கண்ணோட்டத்தில் திசை திருப்புகிறார்கள்.

அதேநேரத்தில், ‘விவாதத்திற்கே தயாராக இல்லை’, என்று செயல்படும் ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பேரவைத்தலைவரின் சர்வாதிகாரப் போக்கு ஆகியவை பற்றி எழுதவோ - செய்திகள் வெளியிடவோ ஊடகங்கள் தயங்குவது வியப்பளிப்பதாக உள்ளது.

மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பாமல் இருந்தால், தி.மு.க. தன்னுடைய ஜனநாயக கடமைகளை சரிவர ஆற்றுவதில்லை என்ற குற்றசாட்டையும் பத்திரிகைகள் பதிவு செய்யும். தி.மு.க.,வின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதச் செயல்களையும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்கள், இப்படி செயல்படுவதை தவிர்த்து, இனிமேலாவது தி.மு.க.,வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, மீண்டும் உடனடியாக அவைக்குத் திரும்பி மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதை எல்லாம், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளாக வெளியிட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தை ஆக்கப்பூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு, பத்திரிகைச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com