

சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் தான் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நேற்று கூறி இருந்தனர்.
இதுபற்றி அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா உயிரை கொடுத்து இந்த கட்சியையும், ஆட்சியையும் தந்து விட்டு சென்றுள்ளார். இந்த சமயத்தில் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர குழப்பம் ஏற்படுத்த முயல கூடாது.
பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் கமிஷன் தீர்ப்பு வந்த பிறகுதான் இனி எதுவும் சொல்ல முடியும். பிரமாண பத்திரம் சம்பந்தமாக இப்போது நாங்கள் எதுவும் பேசவே இல்லை.
நாங்கள் கேட்பதெல்லாம் புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி.தினகரன் எதற்காக இப்போது வெளியிடுகிறார் என்பதுதான். புரட்சித் தலைவி அம்மா அறிவித்த நிர்வாகிகள் கட்சியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் புதிய நிர்வாகிகளை தன்னிச்சையாக அறிவிப்பது தேவையில்லாத ஒன்றாகும்.
அம்மா பேரவையில் 8 இணை துணை செயலாளர்களை நியமித்துள்ளார். அம்மா இருக்கும்போது ஒரு வரைத்தான் நியமிப்பார். அதன் பிறகு நாங்கள் பரிந்துரை செய்து பெயர்களை கொடுப்போம். அதை பரிசீலித்து முடிவெடுத்து தகுதியான வரை அம்மா நியமிப்பார்.
ஆனால் இப்போது தன்னிச்சையாக பதவிகளை அறிவிப்பது கட்சியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். அதனால் தான் கொடுத்த பதவிகளை ஒவ்வொருவராக ஏற்க மறுத்து வருகின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா உடல்நலம் சரியில்லாத சூழ்நிலையிலும் மாவட்டம் - மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து இந்த ஆட்சியையும், கட்சியையும் விட்டு சென்றுள்ளார். இதில் என்ன குறை ஏற்பட்டதாக கருதுகிறார்கள். புதிய நிர்வாகிகளை அவசரப்பட்டு நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி.
இவ்வாறு அவர் கூறினார்.