எம்.ஜி.ஆர். வழியில் வந்த நாங்கள் மது அருந்துவதில்லை- அமைச்சர் சீனிவாசன் பேச்சு

எம்.ஜி.ஆர். வழியில் வந்த நாங்கள் மது அருந்துவதில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Published on

அவனியாபுரம்:

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்கள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். அதனை மிஞ்சும் வகையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் நமது முதல்வர் தற்போது போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.1093 கோடியை ஒரே தவணையில் வழங்கி உள்ளார். இதேபோல் வேட்டை தடுப்பு காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இயக்கத்தை அசைத்து விடலாம் என பல பேர் நினைத்தனர். டீக்கடை நடத்தியவருக்கும், விவசாயம் செய்தவருக்கும் என்ன தெரியும் என்று விமர்சனம் செய்தனர்.

மண்ணை அள்ளிய விவசாயியும், கடின உழைப்பால் உயர்ந்தவரும் இரட்டை குழல் துப்பாக்கிப்போல் முதல்வர், துணை முதல்வராக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் 21 ஆண்டுகள் ஆனாலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான் தமிழகத்தில் நடைபெறும்.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது போல தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்தில் புரட்சி செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி.

எம்.ஜி.ஆர். மது குடிக்க மாட்டார். புகைபிடிப்பதும் இல்லை. அதேபோல் அவரது ரசிகர்களான நாங்கள் யாரும் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதும் இல்லை.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com