

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
கலைத்துறை திரைத்துறை நாடகத்துறையில் இருப்பவர்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் ஜனநாயக நாட்டில் கருத்துக்களை சொல்லலாம்.
ஆனால் நீங்கள் சொல்கின்ற கருத்து மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட கருத்தாக இருக்க வேண்டும்.
அம்மா இல்லாத அரசை பழி சுமத்துகிறார்கள் என்றால் அம்மாவின் ஆத்மாவும் தமிழ்நாட்டு மக்களும் உங்களை சும்மாவிடமாட்டார்கள்.
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக நம்மில் சில பேர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது.
இது கற்களால் கட்டிய கோட்டை அல்ல. நீங்கள் நினைத்த நேரம் கலைப்பதற்கு இது எக்கு கோட்டை. முடிந்தால் கலைத்துப்பார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி சவால் விட்டு இருக்கிறார். 98 சதவீதம் ஆதரவு இருக்கும் எடப்பாடி ஓ.பி.எஸ். அணிகளுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தமிழகத்தில் ஜீவாதார உரிமைகளை பெற வேண்டும் என்றால் மத்தியில் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் சாணக்கியதனம்.
மத்திய அரசிடம் உறவு வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. இன்று புதுமைகள் படைக்கின்ற அரசு மத்திய அரசு. திட்டங்களை தாருங்கள், நிதிகளை தாருங்கள், தமிழக உரிமைகளை பெற்று தாருங்கள் என கேட்கிறோம். எழுச்சி பயணம் செல்வதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது பயணம் வீழ்ச்சி பயணமாக அமையும்.
மதுரையில் மு.க.அழகிரி சொன்னார் இனிமேல் அ.தி.மு.க. இருக்காது என்று. ஆனால் ஊரில் மு.க.அழகிரி இல்லை. நான் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டு சொல்கிறேன். திமுக மக்கள் இயக்கம் என்று கூறுகிறீர்களே, உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு துரைமுருகனுக்கோ அன்பழகனுக்கோ கொடுங்கள் பார்ப்போம். தி.மு.க. ஒரு பெரிய கட்சி அல்ல. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு.
அரசு தமிழ்நாட்டின் ரகசியத்தை காப்பாற்ற முடியாமல் கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு. இன்று முடக்கப்பட்ட இரட்டை இலை கூடிய விரைவில் பறக்கும்.