

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து இருந்தது. அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும், சரி எங்கேயாவது வைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தாம் கையெழுத்து போட்டதாகவும், பிறகு முதல்வரும் கையெழுத்து போட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.