மெரினாவில் போராட்டம் நடத்த போலீசார் திட்டம்

போலீசார் தங்களது கோரிக்கைகளுக்காக மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
மெரினாவில் போராட்டம் நடத்த போலீசார் திட்டம்
Published on

சென்னை:

தமிழக அரசு துறைகளில் போலீஸ் துறை மட்டுமே சங்கம் இல்லாமல் உள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், அதிகாரிகளின் வீட்டில் ‘ஆர்டலி’ முறையை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போலீசார் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் குடும்பத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் தலைமை செயலகம் மட்டுமன்றி, முதல்- அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் தங்களது கோரிக்கைகளுக்காக மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது தொடர்பான அறிக்கை என்று ‘வாட்ஸ்-அப்’பில் பரவியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து காவல் அலுவலர்கள் சார்பில் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவல் துறையினரும், அவரது குடும்பத்தினரும் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கை கழுவும் அதிகாரிகள் தான் உள்ளனர் என்பதை பல சம்பவங்கள் மூலம் நாடே அறியும்.

இதனை ஒழிக்க காவல் சங்கம் அவசியம் என்பதை அரசும், அதிகாரிகளும் அறிந்தது ஒன்றே. காவல் சங்கம் அமைக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஏன் அரசு, காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி வழங்க மறுக்கிறது. சங்கம் அமைத்தால் ஆர்டலி முறை ஒழியும். எனவே அரசு இதன் மீது கவனம் கொண்டு காவலர் சங்கம் உடனடியாக வழங்க அனுமதிக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சருக்கு எங்களது குறைகள் தெரியாது. காவல் துறை உயர் அதிகாரிகள் சலுகைகள் என்ற பெயரில் கண்துடைப்பு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சலுகையினால் எங்களுக்கு எந்த பயனுமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த கோரிக்கைகளுக்காக நாங்களே மெரினா கடற்கரையில் ஒன்று கூடி போராட்டத்தில் குதிக்க உள்ளோம். ஆர்டலிகளை ஒழித்தால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 காவலர்கள், 3000 வாகனங்கள் மிச்சமாகும். எரிபொருள் மிச்சமாகும் எங்களுக்கு உடனடியாக சங்கம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு குரல் கொடுக்கிறோம். சங்கம் கிடைக்காவிட்டால் போராட்டம் உறுதி. இதற்கு எங்களுக்கு தமிழ்நாடு எல்லையில் உள்ள மற்ற மாநில காவலர் அலுவலர்கள்மற்றும் தமிழ்நாடு உளவுதுறையில் பணிபுரிபவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com