மேகாலய மாநிலத்துக்கு மாற்ற எதிர்ப்பு- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜினாமா?

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஹில் ரமணி
தஹில் ரமணி
Published on

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி பதவி ஏற்றார்.

மும்பை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றிய இவர் 4 முறை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். சென்னை ஐகோர்ட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்து வந்தார்.

இவரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்தது.

பெரிய ஐகோர்ட்டில் இருந்து சிறிய ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுவதாலே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

நேற்று இரவு நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை உரியவர்களுக்கு அனுப்பி விட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம்.

X

Maalai Malar
www.maalaimalar.com