பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சர்வாதிகாரிகளாக செயல்படுகிறார்கள்- சத்ருகன் சின்கா குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் சர்வாதிகாரிகளாக செயல்படுகிறார்கள் என்று நடிகர் சத்ருகன் சின்கா குற்றம்சாட்டியுள்ளார். #ShatrughanSinha #BJP #Modi #Amitshah
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சர்வாதிகாரிகளாக செயல்படுகிறார்கள்- சத்ருகன் சின்கா குற்றச்சாட்டு
Published on

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகர் சத்ருகன் சின்கா காங்கிரசில் சேர உள்ளார்.

அவர் ஏற்கனவே பீகாரில் எம்.பி.யாக உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார்.

சத்ருகன் சின்கா நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

பா.ஜனதாவில் நான் எழுச்சியுடன் இருந்தேன். நான் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. உண்மைக்கும், கொள்கைகளுக்கும் இடம் இல்லாததால் நானே வெளியேறி இருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை எனக்கென்று சில எண்ணங்கள் உண்டு. அதற்கு கட்சியில் இடம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. எனவே வேறு பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. நான் எதையும் வெளிப்படையாக பேசுவேன். இதற்கு மாறாக இருக்க முடியாது.

கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சர்வாதிகாரிகளாக நடந்து கொள்கிறார்கள். அமித்ஷா போன்ற மூத்த தலைவர்கள் சிலர் என்னை போன்ற தலைவர்களிடம் மிக கர்வமாக நடந்து கொண்டார்கள்.

நான் கட்சியில் அவமதிக்கப்பட்டேன். நான் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்தும் என்னை முன்னிலைக்கு வரவிடவில்லை. எந்த பாராட்டுகளும் எனக்கு கிடைக்கவில்லை.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா போன்ற தலைவர்கள் என்னை முன்னிலைப்படுத்தி விட்டார்கள். என்னை பீகார் முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று கருதினார்கள். ஆனால் பீகார் கட்சி தலைவர்கள் இதை அனுமதிக்கவில்லை.

இதன் பின்னர் என்னை ஓரங்கட்டும் பணிகள் நடந்தன. கட்சி நிகழ்ச்சிக்கு கூட அழைக்கவில்லை.

நானாசாகேப் தேஷ்முக், ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாய் போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்ட நான் குரல் எழுப்ப முடியாத மக்களுக்கு குரல் கொடுக்கும் நபராக இருக்க வேண்டும் என்று கருதினேன்.

எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் உண்டு. இந்திராகாந்தியும் கூட எனக்கு நண்பர்தான். லாலு பிரசாத் எனது குடும்ப நண்பர். நரேந்திர மோடி கட்சியில் எல்லோருடனும் சேர்ந்து பணியாற்றியவர். அவரை பற்றி எனக்கு பல வி‌ஷயங்கள் தெரியும். அமித்ஷா போன்றவர்களால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

நான் எனது எதிர்காலத்தை துணிச்சலோடு எதிர் கொள்வேன். நான் பாட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். அங்கு அமோக வெற்றி பெறுவேன். பா.ஜனதா யாரை நிறுத்தினாலும் இங்கும் தோற்கும். இப்போது ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்துகிறார்கள். 2014 தேர்தலில் பெற்ற வெற்றியை விட பிரமாண்ட வெற்றியை பெறுவேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com