ஓ.பி.எஸ் கிணற்றை ஒப்படைக்ககோரி லட்சுமிபுரம் மக்கள் மீண்டும் போராட்டம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணற்றை கிராம மக்களிடம் ஒப்படைக்ககோரி மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஓ.பி.எஸ் கிணற்றை ஒப்படைக்ககோரி லட்சுமிபுரம் மக்கள் மீண்டும் போராட்டம்
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ராட்சத கிணறு வெட்டப்பட்டதால் அப்பகுதி மக்களின் நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இதனால் கிணறை ஊராட்சியிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 மாதங்களுக்கு கிணற்றில் இருந்து இலவசமாக தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், கிராமத்தினர் அந்த நிலத்தை வாங்கினால் கிணறை தானமாக தருவதாகவும் ஓ.பி.எஸ் தரப்பில் உறதி அளிக்கப்பட்டது.

இதற்காக மக்கள் நிதி திரட்டி கிணறு மற்றும் நிலத்தை வாங்க முடிவு செய்தனர். ஆனால் திடீரென கிணறு, நிலம் ஆகியவற்றை பன்னீர்செல்வத்தின் நண்பர் சுப்புராஜ் பெயருக்கு விற்பனை செய்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 6-ந்தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதம், கடையடைப்பு, மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன்பிறகு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிணற்றை ஊராட்சிக்கு தானமாக ஒப்படைப்பதாக ஓ.பி.எஸ் தரப்பில் உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு கிணறை ஒப்படைக்க எந்தவித நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஆகஸ்டு 19-ந்தேதி வாயில் கருப்புத்துணி கட்டி அமைதி ஊர்வலம் நடத்த உள்ளோம். மறுநாள் 20-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். கிணறு எங்களுக்கு கிடைக்கும் என்ற நல்லமுடிவு வரும்வரை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

கடந்த 3 மாதமாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு ஓ.பன்னீர்செல்வம் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் மக்கள் சார்பில் அவருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com