ரஜினி அறிவித்த 3 திட்டங்கள் பா.ஜ.க.வில் ஏற்கனவே இருக்கிறது இல.கணேசன் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த 3 திட்டங்கள் பா.ஜனதாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது என இல கணேசன் தெரிவித்துள்ளார்.
இல கணேசன்
இல கணேசன்
Published on

புதுச்சேரி:

பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் புதுவையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 3 திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

இது பா.ஜனதாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். பா.ஜனதாவில் பணியாற்றிய தீனதயாள் உபாத்யா போன்றோர் கட்சி அமைப்புகளில் மட்டும்தான் செயல்பட்டனர். அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பவில்லை.

அதேபோல ரஜினி ஒரு திட்டத்தை முன் வைக்கிறார். இது நல்லதுதான். அமைப்பு ரீதியாக பணியாற்றுவோர் பிரபலத்தை விரும்ப மாட்டார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் பிரபலத்தை விரும்புவார்கள். நல்லெண்ண அடிப்படையில் ரஜினி இதை சொல்லியுள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கட்டும். பா.ஜனதாவுடன் ரஜினிக்கு நல்ல நட்பும், மதிப்பும் உள்ளது. புதிதாக தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பா.ஜனதா தலைவர் முருகன் திறமையானவர். நீண்ட கட்சி அனுபவம் கொண்டவர். அவர் திறம்பட பணியாற்றுவார். அவரின் நியமனம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

பா.ஜனதாவில் உள்ளவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு பதவிக்கு வர ஆசை இருக்கும். ஆனால், கட்சித்தலைமை ஒருவரை தலைவராக அறிவித்தபிறகு அந்த பதவிக்கு வர விரும்பியவர்கள்தான் முதல் மாலையை அவர்களுக்கு அணிவிப்பார்கள். இதுதான் பா.ஜனதாவின் நடைமுறை.

ஜோதிராவ்சிந்தியா பிரதமரை பார்க்க விரும்பினார். அவர் பார்க்க விரும்புவதை வேண்டாம் என மறுக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. தங்கள் பலவீனத்தை சீரமைப்பதற்கு பதிலாக பா.ஜனதா மீது வீண் பழி சுமத்துகின்றனர். நாங்கள் யாரையும் விலை கொடுத்து வாங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com