தேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி: கே.பி.முனுசாமி

சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கே.பி.முனுசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி: கே.பி.முனுசாமி
Published on

சென்னை:

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதிக்குள் முடிவு செய்யும் படி தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், தினகரன் அணியிடமும் ஏற்கனவே இரண்டு கட்ட விசாரணை நடத்தி இருக்கின்றன. இரு அணியினரும் ஏராளமான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார்கள்.

கடந்த 16-ந்தேதி இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை முடிந்து விட்டதால் நாளை (23-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இரட்டை இலை கிடைத்ததும் தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் தரப்பில் உள்ள அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து விட்டோம். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான். எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியானவை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிக எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் இரட்டை இலை அவர்களுக்கு வழங்கவே வாய்ப்பு அதிகம் என்ற கருத்து நிலவுகிறது.

அந்த நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com