சென்னை புறநகர் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் திட்டம் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்து பணிமனை வரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. #MetroTrain
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற் கட்டத்தில் 45.01 கிலோ மீட்டர் நீளமுள்ள இரண்டு வழித் தடங்கள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவுள்ளன. திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரையிலான ஒன்பது கிலோ மீட்டர் நீளமுள்ள முதற்கட்டத்தின் நீட்டிப்புப் பணிகள் நிறைவுற்று 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

2018-2019-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக 1,950 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த படி, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்து பணிமனை வரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை 20,196 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு மாநில அரசும் 40,941 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மற்ற வழித்தடங்களுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் சென்னைப் பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரெயிலின் சேவைப்பகுதி 172.91 கிலோ மீட்டராக அதிகரித்து, பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரெயிலின் பங்கு கணிசமாக அதிகரிக்கும். 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com