சவுதியில் பணமோசடி வழக்கில் ஜெயிலில் உள்ள கணவரை மீட்க போராடும் கேரள பெண்

பண மோசடி வழக்கில் சவுதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்பதற்காக சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக கேரளாவை சேர்ந்த பெண் தெரிவித்துள்ளார்.
சவுதியில் பணமோசடி வழக்கில் ஜெயிலில் உள்ள கணவரை மீட்க போராடும் கேரள பெண்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு பணி மற்றும் தனியார் பணிகளில் உள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் பலர் நர்சுகளாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருச்சூர் மலையூரைச் சேர்ந்த ஜோஷி மற்றும் அவரது மனைவி மேர்சி ஆகியோர் சவுதி அரேபியாவில் அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பணியில் இருந்து விலகி சொந்தமாக தனியார் தீயணைப்பு நிலையம் தொடங்கி நடத்தி வந்தனர். அவர்களது கம்பெனியில் 2012-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிலர் பங்குதாரர்களாக சேர்ந்துள்ளனர்.

லாபத்தில் சென்று கொண்டிருந்த அவர்கள் கம்பெனி திடீரென்று நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பங்குதாரர்களில் ஒருவர் ஜோஷி மீது ரூ.10 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோஷி கடந்த சில ஆண்டுகளாக சவூதி அரேபியா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தனது கணவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து விட்டதாக மேர்சி புகார் கூறி உள்ளார். கணவரை ஜெயிலில் இருந்து விடுவிக்க அவர், பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலன் அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து மேர்சி தற்போது தனது சொந்த ஊரான திருச்சூர் மலையூருக்கு வந்துள்ளார். தனது கணவர் ஜெயிலுக்கு சென்றதால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, எனது கணவரை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும். அவர் மீது பங்குதாரர்கள் பொய் புகார் கொடுத்து ஜெயிலில் அடைத்து விட்டனர். எனது கணவரை விடுவிக்க இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பலமுறை மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை நேரில் சந்திக்க எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டது.

எனது கணவரை ஜெயிலில் இருந்து விடுவிக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com