

திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்தவர் பாதிரியார் தாமஸ் உழுநாளில். இவர் ஏமன் நாட்டில் செயல்படும் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆசிரமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் பாதிரியார் தாமஸ் உழுநாளிலை கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவரது கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு அவரது புகைப்படங்களை தீவிரவாதிகள் வெளியிட்ட பிறகே அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பாதிரியார் தாமஸ் உழு நாளிலை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 18 மாத நடவடிக்கைக்கு பிறகு கடந்த 11-ந்தேதி அவரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
இந்த நிலையில் பாதிரியார் தாமஸ் உழுநாளிலை விடுவிக்க தீவிரவாதிகளுக்கு மத்திய அரசு பணம் கொடுத்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி திருவனந்தபுரம் வந்த மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
பாதிரியார் தாமஸ் உழு நாளிலை விடுவிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அரசின் நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைத்து பாதிரியார் தாமஸ் உழுநாளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதிரியாரை விடுவிக்க தீவிரவாதிகளுக்கு அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை. பாதிரியாரை மீட்கும் விஷயத்தில் அரசு பலவிதமான அணுகு முறைகளை கையாண்டது. இந்த கடத்தல் விவகாரத்தில் பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் முக்கியமாக கருதினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் உழுநாளில் வாடிகன் சிட்டிக்குச் சென்று அங்கு போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீவிரவாதிகள் என்னை கடத்திச் சென்ற போது நான் பயந்துபோனேன். சமூக வலைதளங்களில் தீவிரவாதிகள் பணய கைதிகளை கொடூரமாக கொல்லும் காட்சிகளை பார்த்துள்ளதால் அது போல என்னையும் கொன்று விடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னை மோசமாக நடத்தவில்லை.
சரியான நேரத்திற்கு உணவு கொடுக்காவிட்டாலும் அவ்வப்போது உணவு வழங்கப்பட்டது. 1½ ஆண்டுகளாக ஒரே ஆடையுடன் நான் வாழ்நாளை களிக்கும் நிலை ஏற்பட்டது. கடவுள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அதன் படி தற்போது நான் மீட்கப்பட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.