தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள் - நேசமணி சிலைக்கு தலைவர்கள் மாலை

தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த இந்த நாளில், கன்னியாகுமரி மாவட்டம் உதயமாக காரணமாக இருந்த தியாகிகள் மற்றும் முன்னணி தலைவர்களை நினைவு கூர்வதும் நமது கடமையாகும்.
மார்‌ஷல் நேசமணி
மார்‌ஷல் நேசமணி
Published on: 

நாகர்கோவில்:

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. படித்தவர்கள் நிறைந்த இம்மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பகுதிகளை கொண்டது. ஒரு புறம் கடல், மறுபுறம் மலை, இன்னொருபுறம் பசுமை கொஞ்சும் வயல் வெளிகள் நிறைந்தது.

இன்று தமிழகத்தின் அடையாளமாக திகழும் கன்னியாகுமரி, கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. இதற்காக இம்மாவட்டம் பலரை உயிர் தியாகம் செய்தது என்பது வரலாறு. அந்த தியாகிகளை நினைவு கூறும் நாளே இந்நாளாகும்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய என்னென்ன போராட்டங்களை சந்தித்தது என்பது இன்றைய தலைமுறைக்கும் தெரிய வேண்டும்.

இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. இதனை ஆண்ட மன்னர்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களை 2-ம் தர குடிமக்களாக கருதினர். சாதிய பாகுபாடுகள் தலை தூக்கி நின்றது.

பெண்கள் மார்பு சேலை அணியவும், கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டனர். இதற்காக போராடியவர்கள் கொலைக்களம் அனுப்பப்பட்டனர். சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்காக தொடங்கிய போராட்டம் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டமாக வலுப்பெற்றது.

இதில் அய்யா வைகுண்டசாமி, நாராயணகுரு, குமரி தந்தை மார்‌ஷல் நேசமணி போன்றோர் குறிப்பிட தகுந்தவர்கள்.

இம்மாவட்ட மக்கள் முன்னேற வேண்டுமென்று போராடியவர்கள். இவர்களை போல குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம். வில்லியம், டி.டி. டானியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை உள்பட இன்னும் பலர் இப்போராட்டத்திற்கு துணை நின்றனர்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

சமூக நீதி காக்க புறப்பட்ட வீரர்கள் கன்னியாகுமரியை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர். அவர்களை நசுக்க திருவிதாங்கூர் அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போராட்ட வீரர்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள்.

பனை மரத்தில் இருந்தும் தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பலர் குண்டாந்தடிக்கும் ஆளாகி இன்னுயிரை நீத்தனர். 36 பேருக்கும் அதிகமானோர் பலியாகினர்.

1954-ம் ஆண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதனால் ஏற்பட்ட ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு 1954-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி நேசமணி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.

அதன் பிறகு நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 9 தாலுகாக்களில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையில் பாதி பகுதியும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது.

கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய 4 தாலுகாக்களும் கன்னியாகுமரி மாவட்டம் என்று வரையறுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அப்போதைய முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் வெளியிட்டார். இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் அன்று நடந்தது.

இன்றுடன் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டம் உதயமாக காரணமாக இருந்த தியாகிகள் மற்றும் முன்னணி தலைவர்கள், மார்‌ஷல் நேசமணி ஆகியோரை நினைவு கூர்வதும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் நமது கடமையாகும்.

இதற்காக குமரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாகர்கோவிலில் உள்ள மார்‌ஷல் நேசமணி சிலைக்கும், அவரது நினைவு இடத்திலும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com