மனைவி, மகள் உடன் விராட் கோலி
மனைவி, மகள் உடன் விராட் கோலி

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம்: ஸ்டெயின் சொல்கிறார்

விராட் கோலி இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதற்கான காரணத்தை கண்டறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்ற முடியவில்லை என விராட் கோலி மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பையுடன் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டிகள் முடிந்த உடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார்.

மூன்று வகை கேப்டன் பதவியுடன் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது விராட் கோலிக்கு கூடுதல் சுமையை கொடுப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம் குடும்பம் (Young Family) காரணமாக விராட் கோலி கேப்டன் பதவியை துறந்திருக்கலாம் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘தொடக்கத்தில் இருந்து விராட் கோலி ஆர்.சி.பி.யில் இருக்கிறார். தற்போது விராட் கோலி இளம் குடும்பத்தை பெற்றுள்ளார். ஒரு பக்கம் கேப்டன் பதவி அவருக்கு அதிகமான சுமையை கொடுத்திருக்கும். மற்றொரு பக்கம் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை சுமையை கொடுத்திருக்கும்.

கேப்டன் பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொடுத்து தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதது, அவரது தொழில் முறை கிரிக்கெட்டில் இந்த நேரத்தில் நல்ல முடிவு.

எங்களுக்கு அவருடைய கேப்டன் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. சிறந்த கேப்டன். அவருடைய சாதனை அவரை பற்றிச் சொல்லும். எனவே, அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்ற முடிவை அவர் எடுக்க முடியும். டி20 உலகக் கோப்பை நெருங்குவதால் இது நல்ல முடிவு. சிறந்த விராட் கோலியை உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் நாம் பார்க்க முடியும்’’ என்றார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்ட விராட் கோலிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com