நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? நாளை கடைசி ஆட்டம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நாளை நடக்கிறது. இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? நாளை கடைசி ஆட்டம்
Published on

கான்பூர்:

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

புனேயில் நடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி வீராட்கோலி தலைமையிலான அணி ஒருநாள் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்திய அணி ஒருநாள் தொடரை இழக்காமல் தொடர்ச்சியாக 6 தொடரை கைப்பற்றி உள்ளது. ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0), ஆஸ்திரேலியா (4-1) ஆகிய நாடுகளுக்கு எதிராக வென்று இருந்தது. தற்போது நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தி 7-வது ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

நாளைய ஆட்டத்துக்கான அணியில் வீராட் கோலி மாற்றம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர் தவானும், மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தி விட்டனர். வீராட்கோலி, ரோகித்சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, டோனி ஆகியோரும் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

வேகப்பந்தில் புவனேஷ் வர்குமாரும், பும்ராவும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். அக்‌ஷர் பட்டேல் புனே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அவர் கழற்றிவிடப்பட்டால் குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.

நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. மும்பை போட்டியை போலவே மீண்டும் எழுச்சி பெற்று இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

பேட்டிங்கில் டாம் லாதம் நல்ல நிலையில் உள்ளார். கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், முன்ரோ, குப்தில், நிக்கோலஸ் ஆகியோரும் பேட்டிங்கிலும் முத்திரை பதிக்க கூடியவர்கள். பந்துவீச்சில் போல்ட், சவுத்தி, மிலன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

ஒருநாள் தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது போட்டியாகும். இதுவரை நடந்த 100 ஆட்டத்தில் இந்தியா 50-ல், நியூசிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை.

பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், தினேஷ் கார்த்திக், கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, சஹால், ரகானே, மனிஷ் பாண்டே, ‌ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்ரோ, ரோஸ் டெய்லர், டாம் லாதம், நிக்கோலஸ், கிராண்ட் ஹோம், சவுத்தி, போல்ட், மிலின், சான்ட்னெர், ஹென்றி, பிலிப்ஸ், சோதி, வொர்க்கர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com