2017 - ஆண்டு கண்ணோட்டம்

ஜி.எஸ்.டி, பா.ஜ.க எடுத்த விஸ்வரூபம் என 2017-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை எளிதாக, சுருக்கமாக பார்க்கலாம்.
2017 - ஆண்டு கண்ணோட்டம்
Published on

ஒரே பொருள் மீது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை, சரக்கு லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது ஒவ்வொரு முறையும் எல்லையில் கப்பம் கட்ட வேண்டியது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரே நாடு ஒரே வரி என்ற கோஷத்துடன் ஜூலை மாதம் 1-ம் தேதி பிறந்த உடன் நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.

ஜி.எஸ்.டி.க்கான யோசனை வி.பி.சிங் அரசில் தோன்றினாலும், மோடி அரசில் தான் அது முழுவடிவம் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. 4 விதமான வரிகளுடன் கொண்டுவரப்பட்ட இதற்கு தொடக்கம் முதலே வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வரியால் அதிருப்தி அலைகள் எழுவதை பார்த்த அரசு, பின்னர் பல்வேறு பொருட்களுக்கான வரிகளை குறைத்தும், வியாபாரிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியும் உத்தரவிட்டது.

ஜி.எஸ்.டி பாராளுமன்றத்தில் அமல்படுத்தும் விழா

2017 ஆண்டு பா.ஜ.க.வுக்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. மார்ச் மாதத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. உ.பி., உத்தரகாண்டில் தனிப்பெரும்பாண்மை பெற்றாலும், கோவா, மணிப்பூர் மாநிலத்தில் சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைத்தது.

கடந்த மாதம் நடந்த குஜராத், இமாச்சல் தேர்தலிலும் பா.ஜ.க ஆட்சியமைத்தாலும், குஜராத்தில் வாக்கு சதவிகிதம் சரிய அக்கட்சி சற்று உஷாராகியுள்ளது. 29 மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.க கூட்டணி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

பா.ஜ.க கூட்டணி ஆளும் மாநிலங்கள்

நவீன தொழில்நுட்பங்கள் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டாலும், ரெயில் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் வரை தடம்புரண்ட ரெயில்களின் எண்ணிக்கை மட்டும் 8 ஆகும். இதில், 67 பயணிகள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.

தொடர் ரெயில் விபத்துகளால் ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு, ராஜினாமா முடிவை எடுக்க பின்னர், அவருக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டு புதிய மந்திரியாக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார். புதிய மந்திரி வந்த பின்னரும் இரண்டு பெரிய விபத்துகள் நடந்ததுதான் உச்சகட்டம்.

மகாகவுஷல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து

அமைதி என்பது காஷ்மீர் அகராதியில் இல்லை என்பது எந்த ஆண்டும் போல இந்த ஆண்டும் தொடர்ந்தது. 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல், பனிச்சரிவில் சிக்கி என கனிசமான அளவிலான ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

பா.ஜ.க.வின் மூன்றாம் ஆண்டு ஆட்சியில் 61 சதவிகித அளவிற்கு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது சோகம் அளிக்கும் செய்தியாகும். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பலியாகினர். இந்த ஆண்டிலும், இவ்விவகாரம் தொடர்பாக உருப்படியான எந்த பேச்சுவார்த்தையும் இரு நாடுகளுக்கு இடையே நடக்கவில்லை.

பாதுகாப்பு படை - காஷ்மீர் இளைஞர்கள் இடையே மோதல்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கொலைகள் தீவிரவாதத்திற்கு ஒப்பான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ராஜஸ்தான், ஜார்கண்ட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிகள் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டது, குஜராத்தில் தலித்துக்கள் தாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் மோடி அரசு மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது என பிரதமர் மோடியே பேசினாலும், அதை கண்டு கொள்ளாத கும்பல்கள் தங்களது பணியை வட இந்தியாவில் தொடர்ந்து கொண்டே உள்ளனர். சர்வதேச அளவில் இந்தியா மீது கருப்பு மை விழுந்ததில் இவ்விவகாரமும் ஒன்று.

ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவர் மீது நடந்த தாக்குதல்

இந்தியா - சீனா எல்லையில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்திய ராணுவத்தினர் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு போர் பதற்றம் நிலவியது.

72 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பதற்றம், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூகமாக முடிந்தது. மோடியின் ராஜதந்திர வெற்றி என்று பா.ஜ.க கொண்டாடிய நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களுடன் சீன ராணுவம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது மீண்டும் பதற்றத்தை உண்டாக்கியது.

உச்சத்தில் இஸ்ரோ:

கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த இந்திய விண்வெளி துறை, இந்த ஆண்டில் மற்றொரு சாதனையை படைத்தது. பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் 104 செயற்கைக்கோளை ஒரே கட்டமாக விண்ணில் ஏவியது. பிப்ரவரி மாதம் இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்திய ராக்கெட்டில் செலுத்தியதன் மூலம், கோடிக்கணக்கான வருவாயும் கிடைத்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் சந்திராயன்-2 மற்றும் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள்களை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசுகளுக்கு சவால் விடுக்கும் வளர்ச்சியை விண்வெளித்துறையில் நாம் பெற்றுள்ளோம்.

வினையான விளையாட்டு:

இணைய உலகின் ஒரு அச்சுறுத்தல் ரான்சம்வேர் வைரஸ் என்றால், மற்றொன்று புளூவேல் எனும் விளையாட்டு. முன்னது, கணினியின் வாழ்க்கையை நாசம் செய்தால், பின்னது மனிதர்களின் உயிரை பறித்தது. சின்ன சின்ன டாஸ்க்கில் ஆரம்பிக்கும் புளூவேல் விளையாட்டு விளையாடுபவரின் உயிரை எடுப்பதை இறுதி டாஸ்க்-ஆக கொண்டது. இந்தியாவிலும், பல உயிர்கள் இதற்கு பலியாக அரசு விழித்துக்கொண்டது.

மாவட்டம் தோறும் ஆலோசணை மையங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் என இந்த விளையாட்டு வினையாக கருத்தப்பட்டது. ரஷ்யாவில் புளூவேல் கேமின் அட்மின் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதன்பின்னர் இந்த பிரச்சனையும் ஒய்ந்தது.



வில்லங்க சாமியார்:

அரியானாவில் தேரா சச்சா என்ற அமைப்பை நடத்திவந்த குர்மீத் ராம் ரகீம் என்ற சாமியார், தன் ஆசிரமத்தில் உள்ள இரு பெண்களை பலாத்காரம் செய்த குற்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். தனிகாட்டு ராஜாவாக வாழ்ந்த குர்மீத் சிறையிலடைக்கப்பட்ட போது பெரும் கலவரம் மூண்டது.

சாமியாரின் ஆதரவாளர்கள் பொதுச்சொத்துக்களை கொளுத்தி போராட்டம் நடத்த, பல உயிர்கள் பலியான பின்னர் ராணுவம் வந்து கலவரத்தை முடித்து வைத்தது. எல்லா அரசியல் தலைவர்களிடமும் செல்வாக்காக இருந்த சாமியார் உள்ளே போனதில் ஆட்சியாளர்களுக்கும் வருத்தம்தான். கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாக அரியானா முதல்வர், பிரதமர் மோடி மீது நீதிமன்றமே விமர்சனத்தை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாமியார் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம்

1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என வினோத் ராய் சொன்ன கணக்கு காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளையும் டேமேஜ் செய்தது. மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியை இழக்க முக்கிய காரணமாக இருந்த இந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி ராசா, கனிமொழி உள்பட 17 பேரை சி.பி.ஐ கோர்ட் விடுவித்தது.

நீதிமன்ற தீர்ப்பை விட சி.பி.ஐ செயல்பாடு இந்த வழக்கில் விமர்சனத்திற்கு உள்ளானது. வாய்வழி செய்தியை நம்பி வழக்கு பிணையப்பட்டுள்ளதாக சி.பி.ஐ மீது சரமாரியான விமர்சனத்தை நீதிபதி ஷைனி வைத்தார். இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படலாம் என்ற சூழல் இருக்கும் நிலையில், வழக்கின் வெற்றி இரு கட்சிகளையும் மீண்டு எழச்செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

திமுக வெற்றிக் கொண்டாட்டம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com