குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்
Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை நடத்தியது.

விசாரணையின்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.


பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தானின் வாதத்தை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

“வியன்னா ஒப்பந்தத்தில், தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விலக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. தூதரகம் மூலம் குல்பூஷன் ஜாதவை தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது. ஜாதவுக்கு தூதரக உதவிகள் தொடர்பான விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தின் வரம்பிற்குள் உள்ளது.

எனவே, இவ்வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை வழங்கும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது. இதனை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அவருக்கு தூதரக உதவிகளையும் வழங்க வேண்டும்” என சர்வதேச நீதிமன்ற நீதிபதி ரோனி ஆப்ரகாம் உத்தரவிட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com