நான் வெற்றியை நோக்கி ஓடுபவன்: ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சிறப்பு பேட்டி

நான் வெற்றியை நோக்கி ஓடுபவன்; பின்னால் வருபவர்களை திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என ஆர்.கே. நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருது கணேஷ், மாலை மலர் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு:-

கேள்வி: ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் உங்களை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்:  முதல் முறையாக என்னை வேட்பாளராக தேர்வு செய்த போதே ஆச்சரியப்பட்டேன். சாதாரண தொண்டனான எனக்கும் வாய்ப்பு வழங்கியதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து மக்களுக்கு பகுதி செயலாளர் என்ற முறையில் களப்பணியாற்றி வந்தேன். இரண்டாவது முறையாக செயல் தலைவர் அவர்கள் எனக்கு வாய்ப்பு வழங்கியது என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய வரம். இதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை.

கேள்வி: சட்டம் படித்த நீங்கள், பத்திரிகை துறையிலும் இருந்திருக்கிறீர்கள். இதெல்லாம் தான், மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்ததா?

பதில்: திமுக தொண்டன் என்ற தகுதி மட்டும் அந்த ஊக்கத்தை கொடுத்தது.  

கேள்வி:
இதுவரையில் பொதுவாழ்க்கையில் அறிமுகம் இல்லாதவர்கள் நீங்கள், உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:  பொது வாழ்க்கையில் எனக்கு அறிமுகம் இல்லை என்று கூறுவதை மறுக்கிறேன். என் தாயார் தி.மு.க.வில் மகளிரணியில் பல்வேறு பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு என் எனது தந்தையாருடன் சென்று பார்த்திருக்கிறேன். அப்போது, இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறது இந்த ஆட்சியில், அதனால் இந்த  ஆட்சி இருக்கக்கூடாது, மக்களுக்கு ஈடுபடும் தி.மு.க.வுக்கு உழைக்க வேண்டும் என்று என் ரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. அதன் விளைவாக கட்சிப் பணியாற்றிய எனக்கு கட்சியில் படிப்படியாக பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளேன்.

கேள்வி: ஆர்.கே நகர் தொகுதி ஜெயலலிதாவின் செல்ல தொகுதி என்கிறார்களே? அங்கு திமுக.வுக்கு  உள்ள சாதகமான அம்சங்கள் என்னென்ன?

பதில்:  செல்லத் தொகுதி என்று அவர்கள் யாராவது சொல்லிக்கொள்ளலாம். மக்கள் அப்படி சொல்லவில்லை. கடந்த ஆறரை ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர்தான் அனைத்து நிலைகளிலும் பொறுப்பு வகித்து வருகிறார்கள். 2015-ல் ஜெயலலிதா அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தொகுதிக்கு  அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று அமைச்சர்கள் முதல் அனைவரும் சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால், அதன்பிறகு எட்டிக்கூட பார்க்கவில்லை. அதன் விளைவுதான் 2015 வெள்ளப் பெருக்கின்போது அதே பகுதி அமைச்சர்கள் சென்றபோது அவர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நடந்தது.

அதன்பிறகு போட்டியிட்டபோதும் வாக்குறுதிகள் கொடுத்தனர். செய்யவில்லை. வி.ஐ.பி. தொகுதி என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் மக்களில் நானும் ஒருவன். பிரச்சனைகளை நேரடியாக காண்பிக்க தயார். அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை கூட தீர்க்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியின்போது பட்டேல் நகர் குடிநீரேற்று நிலையம் தொடங்கப்பட்டது. அதனால்தான் வார்டு 38, 41, 47 உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இப்போதும் லாரி மூலம் தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. அதே குடிநீரேற்று நிலையத்தை வைத்து நிச்சயம் குழாய் மூலம் குடிநீர் வழங்கலாம். ஆனால், அதை இந்த ஆட்சியாளர்கள் செய்வது கிடையாது. மக்களுக்காக அவர்கள் பாடுபடுபவர்கள் அல்ல என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கேள்வி: ஒரு பக்கம் ஆளுங்கட்சி, அடுத்து டி.டி.வி தினகரன், தீபா என்று பல முனை தாக்குதல் இருக்குமே, இதில் உங்களுக்கு போட்டியாளர் யார்?

பதில்: நான் வெற்றியை நோக்கி ஓடுபவன். பின்னால் வருபவர்களை திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: மொத்தத்தில் இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற உங்கள் பலம் எது? பலவீனம் எது?

பதில்: எங்களின் பலம் எங்கள் தளபதியின் சுறுசுறுப்பு, அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. பலவீனம் எங்களுக்கு எதுவும் கிடையாது.

கேள்வி:
இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகள், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

பதில்: மக்களின் எதிர்பார்ப்பு என்பதை விட என்னுடைய எதிர்பார்ப்பு என்றும் கூறலாம். நானும் இந்த தொகுதி மக்களில் ஒருவன்தான். தொகுதியில் பல்வேறு  பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வார்டு 38, 41, 47-ல் சுடுகாடு என்பதே கிடையாது. தி.மு.க. ஆட்சியின்போது பக்கிங்காம் கால்வாய் ஓரம் சுடுகாடு அமைக்க திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள்.

ஐஓசி பேருந்து நிலையம் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒரு லட்சம் மக்கள் பயன்படுத்தும் அந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு தி.மு.க. ஆட்சியின்போது பேச்சுவார்த்தை நடத்தி, அந்த இடத்தை கையப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன் ஆட்சி கலைக்கப்பட்டதால் அந்த திட்டமும் முடிந்துபோய்விட்டது.

அடுத்து கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம். இதில், தி.மு.க. ஆட்சியின்போது குப்பைகளில் இருந்து செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க திட்டமிடப்பட்டது. அதற்கும் அவர்கள் மூடுவிழா நடத்திவிட்டார்கள். கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாலம் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். 2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் எனது தாயார் கவுன்சிலராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு தி.மு.க. ஆட்சி போய், அ.தி.மு.க. ஆட்சி வந்தது. இந்த திட்டம் பற்றி நினைக்கவே இல்லை. 2006ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தது. அப்போது எங்கள் செயல் தலைவர், ரெயில் நிலையம் வந்து மக்கள் படும் இன்னல்களை பார்த்து, மீனாம்பாள் நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், கொருக்குப்பேட்டை பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கவும் திட்டமிடச் சொல்லி உத்தரவிட்டார். அண்ணன் மா.சுப்பிரமணியன் முயற்சியால் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இரண்டு பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கினால் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் மேம்பால பணி மட்டும் தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது. ஆனால், 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அவர்கள் மீதமுள்ள பணிகளை முடிக்க 3 ஆண்டுகள் ஆனது. அதன்பின்னரும் பாலத்தை திறக்காமல் மூடி வைத்தனர். அதன்பின்னர் எங்கள் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் முயற்சியின் பேரில் போராட்டம் நடத்திதான் பாலத்தையே திறந்தோம். அதேசமயம் கொருக்குப்பேட்டை சுரங்கப் பால பணி அதே நிலையில்தான் உள்ளது. இதுதான் இந்த ஆட்சி.

இதேபோல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் சீர்கெட்டு கிடக்கிறது. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அன்னிய செலாவணியை அள்ளித் தரும் இந்த துறைமுகத்தில் மீனவர்கள் படும் அவதி கணக்கில் அடங்காதது. அவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதி, ஓய்வெடுக்கும் அறைகள் கிடையாது. மொத்தத்தில் இந்த ஆட்சியாளர்கள் ஆர்.கே. நகர் மக்களை கவனிக்க தவறிவிட்டார்கள்.

கேள்வி: ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என நினைக்கிறீர்களா?

பதில்: இரண்டே ஆண்டுகளில் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

கேள்வி:  கடந்த தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் பணமழை பொழிந்ததாக நாடே பேசியது, இந்த காரணத்திற்காகத்தான் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. அதில் உங்களுக்காக பணமழை இல்லாவிட்டாலும் பண சாரலோ, பரிசு தூறலோ விழ  வைக்கப்பட்டதா?

பதில்: நிச்சயமாக இல்லை. நாங்கள் பணத்தை கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஜனநாயகவாதிகள். மக்களோடு மக்களாக நெருங்கி பழகுபவர்கள். எங்கள் செயல் தலைவர் அதைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அவர் ஓய்வறியா உழைப்பாளி. அடுத்த முறை அவர் தான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்புகிறார்கள். மக்கள் எங்களை ஒரே குரலில் தேர்ந்தெடுப்பார்கள். அந்த காலம் நிச்சயம் வரும்.

கேள்வி: கடந்த தேர்தலைப் போன்று இந்த முறையும் பணமழை பெய்தால் உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

பதில்: நிச்சயம் ஜனநாயகத்தோடு தி.மு.க. வெற்றி பெறும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதனை தடுக்க எங்களது சட்டத்துறை முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அந்த தடுப்பு நடவடிக்கையுடன் எங்கள் செயல் தலைவரின் துடிப்பான ஆற்றலோடு நிச்சயம் வெற்றி பெறுவோம்.

கேள்வி:  உங்களுக்கான பிரச்சாரம் எந்த வகையில் இருக்கும்?

பதில்: வெளியில் இருந்து ஓட்டு கேட்டு வருபவர்கள் தான் பிரச்சாரம் செய்ய வருவார்கள். எங்கள் பிரச்சாரமே மக்களோடு ஒன்றாக கலப்பதுதான். நான் பேசி பழகுவது எல்லாம் தொகுதி மக்களுடன்தான். தொகுதி மக்களுடன் ஒன்றி இருக்கிறேன். எங்களின் இயல்பான நடவடிக்கையே பிரச்சாரம் மாதிரிதான்.

கேள்வி: தேர்தல் கமிஷனுக்கு உங்களுடைய கோரிக்கை  என்ன?

பதில்:
எங்கள் கோரிக்கை குறித்து தலைமைக் கழகம் தெளிவான மனுவை கொடுக்க உள்ளது. தேர்தல் நியாயமான நடைபெற தேர்தல் கமிஷன் தேவையான நடடிவக்கையை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com