ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை
Published on

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?

தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com