சபரிமலையில் கனமழை - பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள் கடும் அவதி

சபரிமலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்குள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
சபரிமலையில் கனமழை - பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள் கடும் அவதி
Published on

திருவனந்தபுரம்:

பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது ஐப்பசி மாத பூஜையை யொட்டி கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழக, ஆந்திர, கர்நாடகா பக்தர்கள் அதிகளவு சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

சபரிமலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இத னால் ஐயப்ப  பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் பம்பை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அன்றிரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

நேற்று நடிகர் திலீப் சபரிமலை சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதற்காக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அவர், பம்பை வந்தடைந்தார். அங்கிருந்து நடைபயணமாக சன்னிதானம் சென்று சாமி ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.

மேலும் கோவில் பிரசாதத்தையும் மேல்சாந்தியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மாளிகைபுரத்து அம்மன் கோவிலிலும் திலீப் தரிசனம் செய்தார்.

சபரிமலையில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இதை தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசும், தேவசம் போர்டும் செய்து வருகின்றன. இந்த பணிகளை சமீபத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com