திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வரும் நீர்தேக்கங்கள்

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மழை பெய்த காட்சி.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மழை பெய்த காட்சி.
Published on

கொடைக்கானலில் வறட்சியின் காரணமாக பிரதான அணையான மனோரத்தினம் சோலை அணை, நகராட்சி நீர்தேக்கம் ஆகியவற்றின் நீர்மட்டம் குறைந்தது.

மேலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக ஏரியைச்சுற்றி ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் அவ்வப்போது கன மழை பெய்வதால் நீர்தேக்கங்களில் தண்ணீர் வரத்து நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் கன மழை நீடித்தது. போட் கிளப்பில் 31 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. குளிர்ந்த சூழல் நிலவியதால் மாலையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருந்தபோதும் தொடர் மழையால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் கலந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. விவசாயிகளுக்கும் இந்த மழை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறி வரும் பருவநிலையால் தட்பவெப்பம் மாறி உள்ளது.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மழைப் பொழிவு குறைவாகவும் உள்ளது. 2-வது கட்ட சீசன் ஆன ஆப் சீசன் தொடங்க உள்ள நிலையில் குண்டாறு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. அணைக்கு 495 கன அடி நீர் வருகிறது. 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 29.13 அடியாக உள்ளது. 153 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.99 அடி. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com