பஞ்சாப்பில் அமோக வெற்றி: ராகுலுக்கு கிடைத்த தீபாவளி பரிசு - காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி

குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், ராகுல் காந்திக்கு மக்கள் அளித்த தீபாவளி பரிசு என காங்கிரஸ் தலைவர்கள் புகழாராம் சூட்டியுள்ளனர்.
பஞ்சாப்பில் அமோக வெற்றி: ராகுலுக்கு கிடைத்த தீபாவளி பரிசு - காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி
Published on

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஸ்வரண் சவாரி, காங்கிரஸ் சார்பில் மறைந்த காங்கிரஸ் தலைவர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனீல் ஜாக்கர் போட்டியிட்டனர்.

அந்த தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் 4,99,752 வாக்குகள் பெற்று அமோக வெற்றியை ருசித்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஸ்வரண் சவாரிக்கு 3,06,533 வாக்குகளே கிடைத்தது.

இதன் மூலம் குருதாஸ்பூர் தொகுதியை பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி தட்டிப் பறித்துள்ளது. அதுவும் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் வீழ்த்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குர்தாஸ்பூர் தொகுதியில் கிடைத்த வெற்றியை பஞ்சாப் காங்கிரசார் இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடினார்கள். ‘‘குர்தாஸ்பூரில் கிடைத்துள்ள வெற்றி காங்கிரசுக்கு கிடைத்துள்ள இன்னிங்ஸ் வெற்றி’’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து கூறினார்.

குர்தாஸ்பூர் தொகுதி வினோத் கன்னாவின் செல்ல தொகுதியாக இருந்தது. 1998, 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து அவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

தொகுதி சீரமைப்பு காரணமாக 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் அங்கு தோல்வியைத் தழுவ நேரிட்டது. என்றாலும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த அந்த தொகுதியை வினோத் கன்னா வைத்திருந்தார். அத்தகைய தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதை ஜீரணிக்க முடியாத தோல்வியாக பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

குர்தாஸ்பூர் தொகுதியில் சுமார் 11 சதவீத வாக்குகளை பா.ஜ.க. இழந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்ததை விட தற்போது கூடுதலாக 26 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com