ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன் முறைகேடு வழக்கு: குஜராத் மருந்து நிறுவன இயக்குனர் கைது

இல்லாத சொத்துகளை வைத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவன இயக்குனரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்தனர்.
ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன் முறைகேடு வழக்கு: குஜராத் மருந்து நிறுவன இயக்குனர் கைது
Published on

புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியிருந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை மற்றும் வட்டியை மேற்படி நிறுவனம் செலுத்தவில்லை. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ரூ.5,383 கோடி பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இல்லாத சொத்துகளின் பேரில் போலியாக கடன் பெற உதவி செய்த ககான் தவான் என்பவர் அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகளால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லியில் கைது செய்யப்பட்டார். 

அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஹவாலா மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷ் கார்க் கடந்த 13-1-2017 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீக்‌ஷித் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விடுமுறைக்கால மாஜிஸ்திரேட் சுமீத் ஆனந்த் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைதான ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீக்‌ஷித்திடம் இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை 14 நாள் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு மாஜிஸ்திரேட்டிடம் அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது. ஒருநாள் மட்டும் அவரை விசாரணை காவலில் அடைக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் சுமீத் ஆனந்த், நாளை இவ்வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி காவல் நீட்டிப்பு பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com