

குஜராத் மாநிலத்தில் துணை முதல்-மந்திரியாக இருப்பவர் நிதீன்படேல். இவரது மகன் ஜெய்மின் படேல். இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஜெய்மின் படேல் தன் மனைவி ஜலக், மகள் வைஷ்ணவியுடன் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தார். கிரீஸ் நாட்டுக்கு கோடைகால விடுமுறை சுற்றுப்பயணம் செல்ல அவர் ‘‘கத்தார் ஏர்வேஸ்’’ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
விமான நிலையத்துக்கு வந்த போது அவர் கடுமையான குடிபோதையில் காணப்பட்டார். அவரால் நிற்க கூட முடியவில்லை. தள்ளாடியபடி இருந்ததால் அவரை வீல்சேரில் உட்கார வைத்து விமான நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.
விமானத்துக்குள் ஏறும் முன்பு நடத்தப்படும் சோதனையின் போது, அவருக்கும் அதிகாரிகளுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த ஜெய்மின் படேல் ஆவேசமாக அதிகாரிகளை திட்டினார்.
இதையடுத்து குடிபோதையில் இருப்பவர்களை விமானத்துக்குள் ஏற்ற இயலாது என்று அதிகாரிகள் அறிவித்தனர். ஜெய்மின் படேலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள்.
ஜெய்மின் படேல் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் மனைவி, மகளும் வெளிநாடு செல்லவில்லை. அவர்கள் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விவகாரம் குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.