தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை அரசு தொடங்கியது

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை தமிழக அரசு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. #ForeignSand
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை அரசு தொடங்கியது
Published on

தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் மாதம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வெளிநாட்டு மணல் இறக்குமதி குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழகத்தில் எம்.சாண்டை 40 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். என்றாலும், மணலையும் உடனடியாக நிறுத்த முடியாது. அரசாங்கத்தில் பல்வேறு கட்டுமானத்திற்கு மணல் தேவைப்படுகிறது.

தனியாரும் கட்டிடம் கட்டுகின்றனர். இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், ஆற்றிலும், ஓடையிலும் மணலை அள்ளி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் இருந்தும் மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு விற்கவும் அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, டெண்டரை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு சிறு கனிமச் சலுவை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 10-ந் தேதியில் இருந்து அவை அமலுக்கு வந்தன. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் (கட்டுமானத்துக்கான) மணல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மணலை தமிழகத்துக்குள் விற்பனை செய்ய பொதுப்பணித் துறை தவிர யாருக்கும் உரிமை கிடையாது. மேலும், பொதுப்பணித் துறை நிர்ணயித்துள்ள தகுதிக் குறியீடுகளின்படி மணல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை தமிழகத்துக்குள் விற்க பொதுப்பணித்துறை தடை விதிக்கும். இதில் அரசு விதித்துள்ள விதிகளை மீறும் நபருக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு tnsand.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்காக முன்பதிவு, செப்டம்பர் 21-ந் தேதி (நேற்று) மாலை 4 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட் - ரூ.19,980; 3 யூனிட் - ரூ.29,970; 4 யூனிட் - ரூ.39,960, 5 யூனிட் - ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com