லண்டனை அடுத்து நியூயார்க் நகரிலும் ‘பலூசிஸ்தான் விடுதலை’ வாசகங்கள் - பாக். அதிர்ச்சி

பிரிட்டனின் லண்டன் நகரை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர பேருந்துகளிலும் ‘பலூசிஸ்தான் விடுதலை’ வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
லண்டனை அடுத்து நியூயார்க் நகரிலும் ‘பலூசிஸ்தான் விடுதலை’ வாசகங்கள் - பாக். அதிர்ச்சி
Published on

நியூயார்க்:

பாகிஸ்தானில் உள்ள பலூச் மாகாணத்தை சேர்ந்தவர்கள் அந்நாட்டு அரசால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வளர்ச்சி திட்டங்கள் எதுவும் தங்களது பகுதியில் இடம் பெறுவது இல்லை எனவும் கூறி தங்களது மாகாணத்தை தனியாக பிரித்து பலூச்சிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதற்காக ‘உலக பலூச் அமைப்பு’ என்ற இயக்கம் செயல்பட்டு வருகின்றது. பலூச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மனித உரிமைகளை மீறி பல்வேறு அமைப்பினர் மீது தாக்குதல்களை நடத்திவருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக லண்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் பலமுறை ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் நகரில் உள்ள பேருந்து மற்றும் டாக்சிகளில் ‘#FreeBalochistan’ என்ற வாசகங்கள் இடம்பெற்றன. பலூச்சில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் உலக அளவில் சென்று சேரவேண்டும் என்பதாலே இப்படி செய்ததாக அந்த அமைப்பினர் கூறினர்.

இந்த செயலுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல, நேற்று நியூயார்க் நகர பேருந்து மற்றும் டாக்சிகளில் பலூச்சிஸ்தான் விடுதலை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மனித உரிமை மீறல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் மற்றும் சீனாவின் பட்டுசாலை திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

பலூச்சிஸ்தான் விடுதலை அமைப்பு ஆதரவாளர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com