மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

சென்னை:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். 15ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், அந்தமான், லட்சத் தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

16ம் தேதி மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அந்தமான், லட்சத்தீவு பகுதிகளிலும், 17-ம் தேதி மத்திய மற்றும் தெற்கு  வங்கக்கடல் பகுதிகளிலும், அந்தமான் பகுதியிலும், 18ம் தேதி மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதன் காரணமாக மீனவர்கள் இன்று முதல் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுக்கூர், வாடிப்பட்டி பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com