உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. #FIFA2018 #RUSVSAU #FIFAWorldCup2018
உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா
Published on

மாஸ்கோ:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.

முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர். இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது. 

ரஷியா வீரர் டென்னிஸ் செரிஷேவ்

இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது. தற்போது அந்த பூனையின் ஆருடம் பலித்துவிட்டது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து - உருகுவே, மொராக்கோ - ஈரான், போர்ட்டுகல் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #RUSVSAU #FifaWorldCup2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com