ஆஸ்திரேலியாவில் பலியான மகளின் உடலை இந்தியா கொண்டுவர சுஷ்மாவிடம் உதவி கேட்ட தந்தை

ஆஸ்திரேலியாவில் பலியான மகளின் உடலை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பலியான மகளின் உடலை இந்தியா கொண்டுவர சுஷ்மாவிடம் உதவி கேட்ட தந்தை
Published on

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவில் பலியான மகளின் உடலை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 120 பள்ளி மாணவ, மாணவியர் ஹாக்கி, கால்பந்து உள்பட ஆறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். போட்டிகள் முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது 5 மாணவிகள் அலைகளில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து அலையில் சிக்கிய 4 பேரை அங்கிருந்தவர்கள் உடனடியாக பத்திரமாக மீட்டனர். ஆனால், இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்ற டெல்லி மாணவி நிதிஷா நேகி(15)யை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே, அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலம் பாறைகளுக்கு இடையே நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பலியான மாணவி உடலை இந்தியா கொண்டுவர தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாணவியின் தந்தை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, மாணவியின் தந்தை பூரன் இங் நேகி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் பலியான எனது மகளின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடமும் தொடர்பில் இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com