பாலக்கோட்டில் போலி மதுபானம் விற்ற வீட்டை சூறையாடிய பெண்கள்

பாலக்கோட்டில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் போலி மதுபானம் விற்ற வீட்டை பெண்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோட்டில் போலி மதுபானம் விற்ற வீட்டை சூறையாடிய பெண்கள்
Published on

பாலக்கோடு:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் செயல்பட்டு வந்த 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பாலக்கோடு பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் அதனை சாதகமாக பயன்படுத்தி தளவாய் அள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் போலி மது பாட்டில்களை பதுக்கி வைத்து தளவாய் அள்ளி, கணபதி கொட்டாய், காவப்பட்டி, கரகூர், பெல்லுப்பள்ளி, திருமல்வாடி போன்ற பகுதிகளில் குடிமகன்களுக்கு தினந்தோறும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார்.

இது குறித்து அப்பகுதி பெண்கள் பாலக்கோடு போலீஸ் நிலையத்திலும் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தளவாய் அள்ளி, கணபதி கொட்டாய், காவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து தளவாய் அள்ளி கிராமத்தில் குடிமகன்களுக்கு சப்ளை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைந்திருந்த போலி மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

வீட்டில் இருந்த போலி மது பாட்டில்களை அடித்து நொறுக்கி சூறையாடிய அந்த பெண்கள் கூறியதாவது:-

இந்த போலி மதுபானங்களை குடித்து விட்டு வந்து ஆண்கள் போதை தலைக்கேறிய நிலையில் ரோட்டோரம் அல்லது ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அந்த பெண்ணிடம் தயவு செய்து மது பானங்களை விற்பனை செய்யாதீர்கள் என பல முறை கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து விற்பனை செய்து வந்தார். இதனால் தான் நாங்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த அந்த போலி மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினோம்.

தினமும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் விரை மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்று வந்தது. இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக தினமும் அந்த பெண் ஒரு சில போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் மாமூல் கொடுத்து வந்தார். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போலி மதுபான கடையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பெண்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com