

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்ததினமான மிலாது நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இஸ்லாமிய பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 2,895 பள்ளிவாசல்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது, இஸ்லாமிய பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், ‘அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள்.
அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் தி.மு.க.வுக்கு இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த மிலாதுநபி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆ.மணியரசன் உள்பட கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.