அண்ணா நினைவிடத்தில் 3-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பிஎஸ் அஞ்சலி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளான 3-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அண்ணா நினைவிடத்தில் 3-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பிஎஸ் அஞ்சலி
Published on

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 49-வது ஆண்டு நினைவு நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் - அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3-ந்தேதி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com