ஆஷஸ் முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 302 ரன்களில் ஆல் அவுட் - ஆஸி. தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஷஸ் முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 302 ரன்களில் ஆல் அவுட் - ஆஸி. தடுமாற்றம்
Published on

பிரிஸ்பேன்:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டயர் குக், மார்க் ஸ்டோன்மான் ஆகியோர் களமிறங்கினர். குக் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஹேன்ட்ஸ்கோம்ப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜேம்ஸ் வின்சி, ஸ்டோன்மானுடன் ஜோடி சேர்ந்தார்.

அவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்டோன்மான் 53 ரன்கல் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் போல்ட் ஆனார். அடுத்து ஜோ ரூட் களமிறங்கினார். வின்சி 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரூட்டும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆனார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. மலான் 28 ரன்களுடனும், மோயின் அலி 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மலானும், மோயின் அலியும் 83 ரன்கள் சேர்த்த நிலையில் மலான் அவுட்டானார். அவரை தொடர்ந்து மோயின் அலியும் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 259 ஆக இருந்தது. அதன்பின் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதையடுத்து, இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், நாதன் லியான் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. அந்த அணி 39 ஓவரில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மோயின் அலி, ஜேக் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com