ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு- போலீஸ் கமி‌ஷனர் பதில் அளிக்க எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனர் பதில் அளிக்கும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் பேரணி நடந்தது என்றும் அப்போது நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

இவரது பேச்சு இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும், எனவே, ரஜினிகாந்த் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி புகார் செய்தார். அவரும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், போலீசில் புகார் கொடுத்து விட்டு காத்திருக்காமல் முன்கூட்டியே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை 2-வது குற்றவியல் கோர்ட்டில் ரஜினிகாந்துக்கு எதிராக உமாபதி வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பொய்யான தகவலை கூறியுள்ளார். இதன்மூலம் இரு பிரிவினர்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் உடனடியாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை விசாரித்தார். பின்னர், இந்த வழக்கிற்கு சென்னை போலீஸ் கமி‌ஷனர், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வருகிற 7-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com