முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்” ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை நினைவு கூறுவதும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம், 2016ஆனது மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய சகாப்தம் ஆகும். மாற்றுத்திறனாளிகள் மாண்புடன் கூடிய நிறைவான வாழ்க்கை வாழ வழி வகை செய்வது நம் அனைவரது கடமையாகும்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கனவே உள்ள அணுக இயலும் தன்மை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் எங்கும் உருவாகி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.