ஈத்தாமொழி அருகே திருமண செலவுக்காக காரை கடத்தி நாடகமாடிய டிரைவர் நண்பர்களுடன் கைது

ஈத்தாமொழி அருகே திருமண செலவுக்காக காரை கடத்தி நாடகமாடிய டிரைவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

ஈத்தாமொழியை அடுத்த ராஜாக்கமங்கலம் துறை பகுதியைச் சேர்ந்தவர் ரஜித் (வயது32).

இவருக்கு சொந்தமாக 2 கார்கள் உள்ளன. அந்த கார்களை அவர் வாடகைக்கு விட்டு வருகிறார். இதில் ஒரு காரை ரஜித் ஓட்டி வருகிறார். மற்றொரு காரை தம்மத்து கோணம் அருகே உள்ள ஞாலம் காலனியைச் சேர்ந்த சுஜின்ராஜ்(26) என்பர் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜின்ராஜ் தன்னை மர்ம நபர்கள் கட்டி போட்டு விட்டு காரை கடத்திச் செல்வதாக உரிமையாளர் ரஜித்துக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பதறிப்போன அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு நின்ற சுஜின்ராஜை அழைத்துக் கொண்டு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்குச் சென்றார்.

பின்னர் சம்பவம் குறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதனை கண்காணித்த போது கார் திருவனந்தபுரம் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனே தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராஜாக்கமங்கலம் போலீசார் கூறிய அடையாளங்களை கொண்டு அவர்கள் அந்த காரை மடக்கி பிடித்து ராஜாக்கமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் காரை கடத்தியது சுஜின்ராஜீன் நண்பர்கள் என தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சுஜின்ராஜூக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அவருக்கு பெற்றோர் இல்லை. மேலும் பண தேவைக்கு என்ன செய்வது என கூறி வந்தார். இதையடுத்து சுஜின்ராஜ் கொடுத்த ஆலோசனையின் பேரில் நாங்கள் காரை கடத்தி அதனை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து திருமணம் செய்யலாம் என முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து காரை கடத்தியதாக சுஜின்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ்ராஜா, சுதன், ராபின்ஜோ, பிரகாஷ், பொன்விஜயன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com