

கோவை:
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு கோவையில் பல்வேறு தரப்பினர் வரவேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கு மாவட்டத்திற்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது தொழில் துறையினருக்கு பயன் அளிக்கும். வணிக நிறுவனங்கள் செயல்படவும், பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
கோவை மோட்டார் பம்பு உற்பத்தியாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தொழில்கள் அனைத்தும் முடங்கி கிடந்தன. உற்பத்தியான பொருட்களை கொண்டு செல்வது, மூலப் பொருட் களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இ-பாஸ் ரத்து என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பம்பு செட் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கஷ்டத்தில் இருந்து மீள உதவும். மேலும் பொதுப்போக்குவரத்து தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது அரசு விதிகளை தளர்த்தி இருந்தாலும், இப்போதுதான் பொது மக்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து உள்ளது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு, சமூக பரவலை தடுக்க வேண்டும். மேலும் பஸ்களில் உள்ள இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்ததால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வரமுடியவில்லை. ஆனால் இனி அவர்கள் வருவதற்கு தடை இருக்காது. இதன் மூலம் கோவையில் முடங்கி கிடந்த தொழில் துறை வளர்ச்சி பெறும். மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பிற மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக, பஸ் மற்றும் ரெயில் சேவையை மாவட்டங்களுக்கிடையே அனுமதிக்க வேண்டும். தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும்.
வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜி.இருதய ராஜா கூறியதாவது :-
இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தடை நீக்கம் ஆகியவற்றை வரவேற்கிறோம். அதேசமயம் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க வேண்டும். கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்பதை இரவு 10 மணி வரை செயல்படலாம் என அனுமதிக்க வேண்டும். ஓட்டல் போன்றவை இரவு 8 மணி வரை செயல்படவும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை பார்சல் உணவு வழங்கவும் அரசு அனுமதித்துள்ளது. ஆனால் போலீஸ் கெடுபிடிகள் இருக்க கூடாது. ஊட்டி போன்ற சுற்றுலா இடங்களுக்கு கலெக்டரின் பரிந்துரையின் பேரில் செல்ல வேண்டும் என்ற நடைமுறையையும் வாபஸ் பெற வேண்டும்.
கணபதி உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த மரகதமணி:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோவில்கள் திறக்கப்படவில்லை. குறிப்பாக அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் பெரிய கோவில்கள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறிய கோவில்கள் மட்டும் கடைசி வாரத்தில் திறக்கப்பட்டன. கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் மன வருத்தத்தில் இருந்தனர். தற்போது அரசு அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளதுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.
கோவை கலிக்கநாயக்கன்பாளையம் லலிதாம்பிகை கூறுகையில், கொரோனா அச்சம் காரணமாக கடந்த 4 மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 1-ந் தேதி முதல் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் யாகம் உள்ளிட்டவை நடைபெற்றால் இது போன்ற தொற்று பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றார்.
அத்லெடிக் பயிற்சியாளர் நிஜாமுதீன்:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீரர்களின் திறமை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. தற்போது அனைத்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. மேலும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இதனை அனைத்து பயிற்சியாளர்களும் வரவேற்கிறோம்.
கோவை பி.என்.புதூர் சங்கீதா கூறுகையில், வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் பஸ் போக்குவரத்தை நம்பியே இருந்தனர். கொரோனா காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆட்டோவிலும், நடந்தும் வேலைக்கு சென்று வந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு பஸ் போக்குவரத்திற்கு அனுமதி கிடைத்ததால் பஸ் போக்குவரத்தை நம்பி இருந்த அனைத்து பெண்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.