சட்டமன்ற கூட்டத்தை நடத்த விடமாட்டோம்- திருச்சி மாநாட்டில் துரைமுருகன் பேச்சு

தி.மு.க. பஞ்சாத்துக்களுக்கு நிதி ஒதுக்க மறுத்தால் சட்டமன்ற கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று திருச்சி மாநாட்டில் துரைமுருகன் பேசியுள்ளார்.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on

திருச்சி:

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி அடுத்து வர இருக் கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக திகழ்கிறது. தி.மு.க. வெற்றி பெற்ற பல இடங்களில் வெற்றியை அறிவிக்காமல் சான்றிதழ் தர மறுத்தார்கள். உடனேயே தலைவரும், டி.ஆர்.பாலுவும் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து அறிவுறுத்தினர். மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் அவருடைய உழைப்பு உங்கள் வெற்றியில் இருக்கிறது.

இன்றைக்கு அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு (கருப்பண்ணன்) எவ்வளவு ஆணவம், அறியாமை இருந்தால் தி.மு.க. வெற்றி பெற்ற பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஒதுக்கமாட்டேன் என்று சொல்கிறார். இது உங்கள் அப்பன் வீட்டு பணமா? எனக்கு அவர் மந்திரி என்று கூட தெரியாது.

அரசியல் அமைப்பு சட்டமோ, உள்ளாட்சி அமைப்பு சட்டமோ? அவருக்கு தெரியவில்லை. அவர் சட்டமன்றத்தில் ஒரு மெம்பர் கிடையாது, அவர் ஒரு நம்பர். நிதி தர மறுத்தால் நீங்கள் தலைமையை தொடர்பு கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தை நடத்த விடமாட்டோம். ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும்.

கலைஞர் ஒரு ராஜதந்திரம் படைத்த மகனை எங்களுக்கு தலைவராக தந்திருக்கிறார். அவரது ராஜ தந்திரத்தால் இன்று 6500 இடங்களையும், பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களையும் தி.மு.க. பெற்றிருக்கிறது. நகர்ப்புற தேர்தலை நடத்துவார்களா? இல்லையா என்பது தெரியவில்லை. கிராமப் புறத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்கள்.

ஆனால் தீர்ப்பு எதிர்மாறாக அமைந்து விட்டது. இதனால் நகர்ப்புற தேர்தலை நடத்துவார்களா? இல்லையா? என்பது தெரிய வில்லை. ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலை நடத்தியே தீரவேண்டும். அதில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com