இரட்டை இலை சின்னம் வழக்கு: போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆராயவில்லை - டி.டி.வி.தினகரன் தரப்பு வாதம்

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் முறையாக ஆராயவில்லை என டி.டி.வி.தினகரன் வக்கீல் நேற்று வாதாடினார்.
இரட்டை இலை சின்னம் வழக்கு: போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆராயவில்லை - டி.டி.வி.தினகரன் தரப்பு வாதம்
Published on

புதுடெல்லி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. ஏற்கனவே சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதங்களை முடித்து உள்ளார்.

இந்த நிலையில் அந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டபோது கூறியதாவது:-

இந்த வழக்கு தேர்தல் கமிஷனில் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முறையாக ஆராயவில்லை. அ.தி.மு.க. கட்சி விதிமுறைகள், கட்சி தொண்டர்களின் ஆதரவு, கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு ஆகிய அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை.

இரட்டை இலை சின்னத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்களை தேர்தல் கமிஷன் முறையாக சரிபார்க்கவில்லை.

அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திர ஆணவங்களில் 325 நபர்களின் ஆவணங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அவற்றில் 126 பேர்களின் பிரமாண பத்திரத்தில் முரண்பாடு உள்ளதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் போலியானவை. பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வேறுபாடு உள்பட பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இவற்றை தேர்தல் கமிஷன் முறையாக பரிசீலித்து ஆராயவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) விசாரணை தொடர்ந்து நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com