தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- டாக்டர்கள் சங்கம் கண்டனம்

கொரோனாவுக்கு பலியான டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு டாக்டர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் சைமன்
டாக்டர் சைமன்
Published on

சென்னை:

கொரோனாவுக்கு பலியான டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு டாக்டர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையைச் சேர்ந்த டாக்டர்கள் கூறும்போது, “கொரோனாவுக்கு பலியான டாக்டர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அதில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு ஜனநாயக டாக்டர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பில் உயிரிழக்கும் டாக்டர்களின் உடலை அடக்கம் செய்யாவிடாமல் தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

டாக்டர் சைமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட வேளாங்காடு கல்லறை தோட்டத்துக்கு சென்ற டாக்டர் பாக்யராஜும் தாக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஓடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. டாக்டர் சைமன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து இருந்தால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் தனது உயிரை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சிகிச்சை அளித்ததால்தான் இன்று நோய் தாக்கி உயிரிழந்துள்ளார். அப்படிப்பட்டவரின் உடலை எவ்வளவு மரியாதை கொடுத்து அடக்கம் செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி பொதுமக்கள் மனதில் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com