தி.மு.க.வினர் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் - மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் தி.மு.க.வினர் பெயர் விடுபட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-ஐகோர்ட்டு மதுரை கிளை மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மணல் குவாரிகளில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறாரே?

பதில்:-இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு உள்ளபடியே வரவேற்கப்படவேண்டியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அந்தக்கட்சியின் மாவட்டசெயலாளர்களுக்கும் மாமூல் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், அண்மை காலமாக மணல் குவாரிகள் தவறான வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், புதிதாக 75 மணல் குவாரிகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் திடீரென அறிவித்தார். அதனால் தான் தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

என்னைப்பொறுத்தவரையில், தடை உத்தரவு ஒரு பக்கமிருந்தாலும், அதனை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கக்கூடிய தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், நேர்மையான, நியாயமான முறையில், மணலை முறையாக எடுக்கக்கூடிய வகையில், எம்-சாண்ட் கிடைக்கும் வகையில், மணலை இறக்குமதி செய்யும் வகையிலான உரிய வழி வகைகளை காண அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் அறிவுறுத்த, சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

கேள்வி:-கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் கடும் மழையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு, கடலுக்குள் சென்றவர்கள் திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறதே?

பதில்:-வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே முறையாக முன்னெச்சரிக்கை வெளியிட்டும், இந்த அரசு அதில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

கேள்வி:-ஆந்திராவில் இருந்து தரமற்ற சிலிக்கான் மணல் தினசரி 600 லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறதே?

பதில்:- இந்த ஆட்சியைக்காப்பாற்றிக்கொள்ள இது போன்ற முறைகேடுகளை எல்லாம் அவர்கள் செய்து வருகிறார்கள். இது போன்ற பல முறைகேடுகளுக்கு இந்த ஆட்சி துணை போகிறது. ஆகவே தான், இப்படிப்பட்ட தீர்ப்பை கோர்ட்டு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மணல் பிரச்சினையை தீர்க்க, முறைப்படுத்த ஒரு வழி காண வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

கேள்வி:-ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் தி.மு.க.வை சேர்ந்த பலரது பெயர்கள் விடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்:-தி.மு.க. வழக்கறிஞர்அணி இதையெல்லாம் ஏற்கனவே கண்டறிந்து, அதனடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறைப்படி தெரிவித்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், டெல்லியில் உள்ள இந்தியதேர்தல் ஆணையத்தையும், தேவைப்பட்டால் கோர்ட்டை நாங்கள் நாடுவோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி அருகில் கடந்த 25-ந்தேதி நடைபெற்ற விபத்தில் ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரகுபதி பலியானார். இந்த நிலையில் நேற்று கோவை வந்த மு.க.ஸ்டாலின் ரகுபதியின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தை கந்தசாமி, தாய் சிவகாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரகுபதி என்ற இளைஞர் நியாயமாக மணக்கோலத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் பிணக்கோலமாக மாறிய கொடுமை மிகுந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ஜினீயர் ரகுபதியை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.

‘நானாக இருந்தாலும், கழக முன்னோடிகள் யாராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிக்கும் கட்-அவுட், பேனர்கள் வைக்க கூடாது. அது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கிறது. பொதுமக்கள் அதனை விரும்பவில்லை. எனவே யாரும் வைக்க கூடாது. மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நான் அறிவித்தேன். அந்த நடைமுறை தி.மு.க.வை பொறுத்தவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ஜினீயர் ரகுபதியின் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.

மு.க.ஸ்டாலின், விபத்தில் பலியான என்ஜினீயர் ரகுபதியின் தந்தைக்கு ஆறுதல் கூறியபோது எடுத்தபடம்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com