தி.மு.க. மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது: 3 மாவட்டங்களில் போராட்டம் ஒத்திவைப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. மூன்று மாவட்டங்களில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது: 3 மாவட்டங்களில் போராட்டம் ஒத்திவைப்பு
Published on

சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தி.மு.க. கூறியிருந்தது.

அதன்படி இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது, தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கச்சராயன்குளத்தை பார்வையிட மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த குளத்தில் வண்டல் மண் எடுத்தது தொடர்பாக தி.மு.க. போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, மு.க.ஸ்டாலின் அங்கு செல்வதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் மனித சங்கி போராட்டத்தை தி.மு.க. ஒத்திவைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாளில் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. சென்னை சின்னமலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com