

நெல்லை:
நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையின் பேரில், பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் அனைவரையும் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடங்கியது.
மாவட்ட அளவிலான கணக்கெடுப்பில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், ஜான்சி மேரி மற்றும் புஷ்பா, களக்காடு வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மலையடிபுதூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது செங்கல் சூளையில் வெளிமாநில குழந்தைகள் இருவரும், வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் பள்ளி செல்லா குழந்தைகள் நான்கு பேரும் கண்டறியப்பட்டனர்.
இதுபோன்றே நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 வட்டார வளமையங்களில் உள்ள மேற்பார்வையாளர் பொறுப்பு, ஆசிரியர் பயிற்-றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.